சர்வதேச காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வடக்கு கிழக்கு மாகாண உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பேரணிகள் இடம்பெற்றன. இதற்கமைய யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான பேரணி காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெற்றது. பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை சர்வதேச காணாமலாக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதேநேரம் திருகோணமலையில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.