ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்துவார் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் தெடர்பில் பல வருடங்களாக முன்னெடுத்த செயற்பாடுகள் மற்றும் இணக்கப்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ்(Moody’s) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என குறித்த நிறுவனம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் இலங்கையின் கடன் அவதான நிலைமை அதிகமாகவே இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கு புதிய அரசாங்கம் முன்னுரிமையளிக்கும் என சர்வதேச கடன்தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.