தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான கூட்டம், இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உரையாடப்பட்டது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா இல்லையா என்ற முடிவை எடுப்பதற்கு சனிக்கிழமை வரை அவகாசத்தை கேட்டுள்ளது.
27.09.1987இல் கல்நாட்டினகுளத்தில் மரணித்த தோழர்கள் காஸ்ட்ரோ (முல்லைத்தீவு), நந்தீஸ் ( முல்லைத்தீவு), கம்பன் (திருநகர்) ஜெயராஜ் உள்ளிட்ட ஏழு தோழர்களினதும் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக டி.எஸ்.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். டி.எஸ்.ராஜகருணா இதற்கு முன்னர் முத்துராஜவெல எரிபொருள் முனையத்தின் முகாமையாளராக செயற்பட்டார். இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக பேராசிரியர் மயூர நெத்திகுமாரகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இலங்கையர்களுடன் தூதரம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர் கபில ஜயவீர குறிப்பிட்டுள்ளார். சுமார் 7,600 இலங்கை பணியாளர்கள் லெபனானில் பணி புரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் தெற்குப் பகுதிகளில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.