பதுளை மஹியங்கணை வீதியின் அம்பகஹஒய பகுதியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேருந்து விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களினதும் சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த விபத்தின் போது குறித்த இருவருக்கும் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே அவர்கள் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
பதுளை போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் இருவரினதும் உடல்கள் கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரிழந்த இருவரினதும் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், உயிரிழந்த இரண்டு மாணவர்களினதும் இறுதி கிரியைகள் தொடர்பான செலவுகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை ரூனெயளர் மஹியங்கணை வீதியின் அம்பகஹஒய பகுதியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சூரியவெவ பகுதியில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானது.
பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது. இந்த விபத்தில் 39 பேர் காயமடைந்துள்ள நிலையில் 6 பேர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.