15 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த 15 பேருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார சேவையுடன் தொடர்புபடாத பதவிகளில் பணியாற்றிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஐக்கிய நாடுகள் சபையின் நிவ்யோர்க்கிற்கான வதிவிட பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ்,

பிரித்தானிய உயர்ஸ்தானிகரான முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம,

இந்திய உயர்ஸ்தானிகரான முன்னாள் தூதுவர் ஷெனுகா செனவிரத்ன,

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரான, வௌிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வர,

ஜப்பானுக்கான தூதுவர் ரொட்னி பெரேரா,

மலேசியாவிற்கான உயர்ஸ்தானிகரான முன்னாள் விமானப்படை தளபதி சுமங்கல டயஸ்,

நேபாளத்திற்கான தூதுவர், முன்னாள் விமானப்படை தளபதி சுதர்ஷன பத்திரன,

கியூபாவிற்கான தூதுவர், முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன,

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன,

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவர் உதய இந்திரரத்ன,

கென்யாவிற்கான உயர்ஸ்தானிகர் பி.கனநாதன்,

சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியின் சகோதரரான ஸ்ரீமால் விக்கிரமசிங்க,

ஈரானுக்கான தூதுவர் மொஹமட் ஷாஹிட் ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் வெளிநாட்டு சேவைக்கு பொருத்தமானவர்கள் எதிர்காலத்தில் அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்தார்.

டிசம்பர் முதலாம் திகதியளவில் நாடு திரும்புமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அத்துடன் வௌிநாட்டு தூதரகங்களிலும் அரசியல் நியமனங்கள் பெற்ற முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் புதல்வர்கள், மகள்மார், சகோதரர்கள் உள்ளிட்ட  உறவினர்களும் உள்ளதாகவும் அவர்களையும் ஒரு மாதத்திற்குள் நாடு திரும்புமாறு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலர் தொடர்பில் குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும் அவை தொடர்பில் ஆராயப்படும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.