முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி ஆகியோர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தப்பட்ட காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நுகேகொடை நீதவான் ருவனி ஜயவர்தன முன்னிலையில் இருவரும் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் மனைவியான ஷஷீ பிரபா ரத்வத்தேயிற்கு சொந்தமான மிரிஹானையிலுள்ள இரண்டு மாடி வீட்டில் இருந்து இலக்கத் தகடுகளற்ற அதிசொகுசு கார் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கமைய, மிரிஹானை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த கார் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டதென்பது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 30 ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குறித்த கார் தொடர்பான விசாரணைகளை அடுத்து லொஹான் ரத்வத்தேயின் மனைவி கடந்த 4ஆம் திகதி நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதற்கமைய இருவரும் இன்று முற்பகல் நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.