வாக்குரிமை பெற்றுள்ள அனைவரும் தமது பெறுமதிமிக்க வாக்குகளை அளிப்பதன் மூலம் தமது விருப்பத்தினையும், எதிர்ப்பினையும், எதிர்பார்ப்புகளையும் எதிர்வரும் 14ம் திகதியன்று வெளிப்படுத்த தயாராகின்றனர். வாக்களிக்கவுள்ள மக்களுக்கு, குறிப்பாக வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, வாக்களிப்பின்போது விசேடமாக கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து அறிவுறுத்துவதும், தெளிவுபடுத்துவதும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ள அனைவரினதும் கடமையாகும்.

முதலாவதாக, வாக்களிப்பு நாளன்று அனைத்து தமிழ் வாக்களர்களும் வயது வேறுபாடின்றி தமது வாக்குரிமையை பயன்படுத்துவது கட்டாயக் கடமையாகும்.
வழமையாகவே தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் வாக்களிப்பு வீதங்கள் திருப்திகரமானதாக அமைவதில்லை. அதேநேரத்தில், அந்த மாவட்டங்களில் வாழும் ஏனைய சமூக மக்களின் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதங்கள் மெச்சத்தக்கவையாகவும், தமது சமூகப் பிரதிநிதிகளின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் பங்களிப்பு செய்யக்கூடியதாகவும் அமைவதை அவதானிக்க முடிகிறது.
தியாகங்கள் நிறைந்த ஆயுதப் போராட்டத்தின் தோல்வி, தமிழ்த் தலைமைகள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் சிலரின் சுயநலமான செயற்பாடுகள், தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நீண்ட காலமாக தீர்வுகள் காணப்படாமை போன்ற பல காரணங்கள் தமிழ் மக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டாலும்கூட அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் இருப்பிற்கும் வேட்டு வைக்கக்கூடிய விதத்தில் நாம் எவரும் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல.
வாக்காளர்களாக பதிவு செய்வதில் சிரத்தையின்மை, வாக்களிப்பு வீதத்தின் வீழ்ச்சி, வாக்களிப்பில் அக்கறை காட்டாமை போன்ற காரணங்கள் இன்று யாழ் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைத்துள்ளது. எனவே நாமும் எம்மைச் சுற்றியுள்ளவர்களும் முழுமையாக எமது வாக்குகளை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, நாம் அளிக்கும் வாக்குகள் யாவும் பெறுமதிமிக்கவையாக, தீர்மானிக்கக்கூடியதாக அமைய வேண்டும். தேர்தல் சட்டத்தின் பிரகாரம், எமது வாக்குகள் கணக்கில் எடுக்கப்படாதவையாக மாறுவதற்கு நாமே காரணமாக இருந்து விடக் கூடாது. எமது வாக்குகளை, விடயங்களை தீர்மானிக்கும் வாக்குகளாக தீர்க்கமாக பயன்படுத்த வேண்டுமே தவிர, அவை தேர்தல் அதிகாரிகளால் தகுதியில்லாதவையாக கழிவுக் கூடைக்குள் போடப்படுவதற்கு வழியை ஏற்படுத்தக் கூடாது.
தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஒரு தேர்தல் மாவட்டத்தில், அளிக்கப்பட்ட வாக்குகளில் நிராகரிக்கப்பட்டவை போக, மீதியான செல்லுபடியாகும் மொத்த வாக்குகளின் ஐந்து வீதத்திற்கும் குறைவான அளவில் வாக்குகளைப் பெறும் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களின் வாக்குகள் தேர்தல் அதிகாரிகளால் இறுதியான வாக்கு எண்ணிக்கையில் இருந்து புறம்தள்ளப்பட்டுவிடும். ஏற்கனவே கூறப்பட்டது போல, அவை கழிவுக் கூடைக்குள் போடப்பட்ட பின்னர், மீதமுள்ள கட்சிகள் மற்றும் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளைக் கொண்டே ஒரு பிரதிநிதிக்கான வாக்கு எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் 16,220 வாக்குகள் பெற்ற சுயேச்சைக்குழு-05, 13,564 வாக்குகள் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி, 6,522 வாக்குகள் பெற்ற ஐ.தே.க ஆகியவை உள்ளிட்ட 28 கட்சிகள், சுயேச்சைகுழுக்கள் மொத்தமாக பெற்ற 59,763 வாக்குகள் எண்ணிக்கைக்குட்படாமலே கழிவுகளாக்கப்பட்டுவிட்டன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில், 10,064 வாக்குகள் பெற்ற தமிழர் சமூக ஜனநாயக கட்சி, 8,789 வாக்குகள் பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, 8,232 வாக்குகள் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை உள்ளிட்ட 41 கட்சிகள், சுயேச்சைகுழுக்களின் 46,204 வாக்குகள் எண்ணிக்கைக்குட்படாமலே கழிவுகளாக்கப்பட்டுவிட்டன. கழிக்கப்பட்ட 46,204 வாக்குகளில் குறைந்தது 10,000 வாக்குகளாவது அன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தால் தமிழ் தேசியத்திற்காக குரல்தரவல்ல மேலும் ஒரு பிரதிநிதி வன்னியில் கிடைத்திருப்பார்.
திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில், 3,775 வாக்குகள் பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, 2,745 வாக்குகள் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள், சுயேச்சைகுழுக்களின் 18,347 வாக்குகள் பயன்படாமல் போயுள்ளன. இம்முறைத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி திருமலை மாவட்டத்தில் ஏனைய சமூகத்தினரின் வாக்குகளை பல கூறுகளாக பிரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதால், தமிழ் மக்கள் முழுமையாக தமது வாக்குகளை செலுத்தி, வெல்லக்கூடிய தமிழ் தேசியத் தரப்பாக உள்ள, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சிக் கூட்டிணைவை ஆதரிப்பார்களாயின் அக் கூட்டுஇரண்டாவது ஆசனத்தையும் பெறமுடியும் என ஆசைப்படுகின்ற திருமலை மாவட்ட மக்களின் பேரவாவில் தவறு ஏதும் இருக்க முடியாது.
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 8,113 வாக்குகள் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, 4,960 வாக்குகள் பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, 1,203 வாக்குகள் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை உள்ளிட்ட 32 கட்சிகள், சுயேச்சைகுழுக்களின் 57,016 வாக்குகள் கணக்கிற்கு எடுக்கப்படவில்லை. இதில் குறைந்தது பதினையாயிரம் வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்தால் அக் கூட்டமைப்பு மேலும் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்க முடியும்.
திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில், ஏற்றுக்கொள்ளப்பட்ட 385,998 வாக்குகளில் 20,847 வாக்குகள் வாக்கெண்ணிக்கைக்கு உட்படாமல் விடப்பட்டுள்ளது. அம் மாவட்டத்தில் உள்ள மக்கள் தமது வாக்குகள் வீணடிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் செயற்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனாலும் தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 25,255 (6.54%) வாக்குகளையும், அகில இலங்கை தமிழர் மகாசபை 29,379 வாக்குகளையும் (7.61%) பெற்று தமிழர்களின் பலம் இரண்டாக பிளவுபட்டதால் அங்கு தமிழர்கள் தமக்கு பிரதிநிதித்துவம் எதனையும் பெறமுடியாமல் போனது. ஆனால் இம்முறை, எண்பது வீதமான தமிழ் வாக்காளர்கள், வெல்லக்கூடிய, ஒற்றுமை எனும் தளத்தில் நிற்கக்கூடிய தமிழ் தேசியத் தரப்பிற்கு வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை நிச்சயப்படுத்தும் மனநிலைக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் தீர்மானத்தில் வேட்பாளர் ஒருவரின் பிரதேசம், மதம், கல்வித் தகைமை, தனிப்பட்ட குணாதிசயங்கள் செல்வாக்குச் செலுத்துமென்பது நிதர்சனமானது. ஆனாலும் அவ்வாறான எண்ணங்களும், போக்குகளும் தமிழ் தேசியத்தின் பலத்தை சிதைப்பதற்கு உதவியாக அமைந்து விடக்கூடாது.
அதே நேரத்தில் சிங்கள தேசியக் கட்சிகளின் வேட்புமனுக்களில் திட்டமிட்டு உள்வாங்கப்பட்டிருக்கும் தமிழ் வேட்பாளர்கள் எக்காலத்திலும் வெல்லமுடியாதவர்கள் என்பதும், தமிழ் வேட்பாளர்கள் பெற்றுக் கொடுக்கும் வாக்குகள் அவ் அணிகளில் உள்ள ஏனைய சமூக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பையே உறுதி செய்யும் என்பது எமது மக்களின் கசப்பான அனுபவமாகும். இவ் விடயம் வன்னியிலும், கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி ஊடாக மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறும் தமிழ் வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்.
பேரினவாதக் கட்சிகளின் முகவர்களினாலும், தமிழ்க் கட்சிகளின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தனவந்தர்களாலும், நயமாக பேசி நிதியுதவி அளிக்கப்பட்டு உள்வாங்கப்பட்ட படித்த பண்பான பல வேட்பாளர்களுக்கு தேர்தல் களநிலவரங்களின் உண்மைத் தன்மைகள் விளங்கவில்லை அல்லது அவர்களுக்கு நேர்மையான முறையில் எதுவும் சொல்லப்படவில்லை என்றே தெரிகிறது.
எனவே, தமிழர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் அனைத்து மக்களும் தங்களது பெறுமதியான வாக்குகளை சிதறாமல், கழிவுப் பொருட்களாக மாறாமல் பாதுகாப்பது அவர்களது தலையாய கடமையாகும்.
மூன்றாவதாக, தமிழினத்தின் மீது இன்னமும் தளர்வடையாமல் இருக்கும் பேரினவாத சக்திகளின் கெடுபிடிகளும், நில அபகரிப்புகளும், பௌத்த மயமாக்கலும் மேலும் மேலும் அதிகரித்துச் செல்லாமலிருக்க வேண்டுமாயின், விமர்சனங்களுக்கு அப்பால் அது ஏதாவது ஒரு தமிழ்த் தேசியக் கட்சியால் மட்டுமே முடியும் என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மத்தியில் குற்றங்குறைகள் உள்ளோரைத் தவிர்த்து, பொருத்தமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, தமிழ் தேசியக் கட்சிகளை வலுப்படுத்தக்கூடிய போதியளவு வாய்ப்பினை நாட்டின் தேர்தல் முறைமை எமக்குத் தந்துள்ளது.
தனிப்பட்ட ஒரு வேட்பாளரின் குறைகளால், பலப்படுத்தப்பட வேண்டிய ஒரு அணி பலவீனமடைய இடமளிக்காதிருப்போம். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் இதுவரை என்ன செய்துள்ளன எனக் கேள்வி கேட்பவர்களுக்கும் அவர்களை கேட்கத் தூண்டுகின்ற பேரினவாதக் கட்சிகளின் முகவர்களுக்கும் எமது ஒரே பதில், எப்போதும் எங்கள் பிரதிநிதிகள் தடுப்பணையாக செயற்பட்டிருக்காவிடின் எமது தேசியம், நிலம், பண்பாடு, பொருளாதாரம் அனைத்தும் பௌத்த சிங்கள மேலாதிக்க வெள்ளத்தில் என்றோ அள்ளுண்டு போயிருக்கும் என்பதேயாகும்.
இன்றைய தேர்தல்கள நிலவரப்படி, தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில், நம்பிக்கைக்கு உரிய அணியாகவும், ஒற்றுமையின் தளத்தில் நின்று செயற்படும் அணியாகவும் வெல்லும் அணியாகவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மட்டுமே உள்ளது என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் உணர்ந்து ஏற்றுக் கொண்டுள்ளதை, ஏனையோரும் ஏற்றுக்கொண்டு அதனைப் பலப்படுத்த ஒன்று சேருவதே எம் மக்களுக்கு நிரந்தரமான பயனைப் பெற்றுத் தரும்.
நா. இரட்ணலிங்கம்
செயலாளர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)