மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் 3 மாகாணங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 399 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையில் பலத்த வேகத்தில் வீசக்கூடும். அத்துடன், குறித்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், கடல் அலைகள் உயர்வாகவும் காணப்படுவதுடன் குறித்த பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் காவல்துறை தலைமையகத்தில் இன்றும் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 10ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த சம்பவம் சமூகத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும்இ சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏலவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அக்குரனைப் பகுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, புதிய வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான நாடாளுமன்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதனால் உடனடியாக வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதிக் கோரி அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து சுயேட்சையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர். நேற்றைய தினம் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்த்திருந்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற பெண்ணும் அவரது சிசுவும் உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த தரப்பினர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்படி, வைத்தியசாலை வளாகத்தில் உள்ள சி.சி.ரி.வி. காணொளி காட்சிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.