காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,
இராசமாணிக்கம் சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், எஸ் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி சிறிநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடை சட்டத்தின் பயன்பாடு, காணி விடுவிப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நீதிமன்ற பொறிமுறை ஒன்று இல்லாமல், காணாமல் ஆக்கபட்டோர் அலுவலகத்தினூடாக இடம்பெறும் விசாரணைகளை ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
அதேநேரம், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டார்.