இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 23,958 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஸ்யாவில் இருந்து 4,418 பேரும், இந்தியாவிலிருந்து 4,317 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,592 பேரும் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளாக வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இரத்து செய்ததால் 72 கோடி ரூபாவிற்கும் அதிக அரச பணம் வீண் விரயமாகியுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையினால் குறித்த பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது. இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் காற்றானது 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த ஜீப் வண்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது சாரதி ஆகியோர் நேற்று பிற்பகல் கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது போலவத்த சந்தியில் வைத்துப் பெண் ஒருவர் ஜீப் வண்டியின் மீது மோதுண்டுள்ளார்.