தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய சந்தேகநபர் திருகோணமலை – குச்சவௌியில் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கமைய இன்று(15) முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குச்சவௌி பல்லவக்குளம் காட்டுப்பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தற்போது குச்சவௌி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மாலை காணாமல்போன 10 வயதான சிறுமி, அவரின் அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள தென்னந்தோப்பிலிருந்து அடுத்தநாள் காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, சிறுமியின் சடலம் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியானது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைதான 52 வயதான பிரதான சந்தேகநபர், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றார்.
பல மாதங்களுக்கு பின்னர் சந்தேகநபர் இன்று திருகோணமலை – குச்சவௌியில் பகுதியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.