இந்தியாவிற்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இந்தியாவின் ராஷ்ட்ரபதி பவனில் இன்று(16) முற்பகல் நடைபெற்றது. இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து இலங்கை – இந்திய தலைவர்களுக்கும் இருநாட்டு இராஜதந்திரிகளும் வணக்கம் செலுத்தியும் கைலாகு கொடுத்தும் வரவேற்றனர்.

அதன்பின்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நண்பகல் இடம்பெற்றது.

இந்த நிலையில், இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடெல்லி நகரை நேற்று(15) சென்றடைந்த ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய – இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தல், இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல், இலங்கையின் விவசாயத்துறை நவீனமயப்படுத்தல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை நிலையான மற்றும் நம்பிக்கையான பங்காளர் என்ற வகையில் இந்தியா, இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு இன்று உறுதியளித்தார்.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அந்நாட்டு தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முயற்சிகள் தொடர்பில் இந்தியாவிற்கு நம்பிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது உறுதியளித்துள்ளார்.

எதிர்கால நோக்குடன் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை புதிய கோணத்தில் கொண்டுசெல்லும் வகையில் பௌதீக, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி ஆகிய பிரதான தூண்களை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதும் இருநாடுகளுக்குமிடையே மின்சார வலையமைப்பு இணைப்பு மற்றும் பல் உற்பத்தி, பெட்ரோலிய குழாய் இணைப்பை ஏற்படுத்துவது என்பன குறித்தும் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், அனுராதபுரம் புகையிரத பாதை சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு என்பவற்றுக்கு உதவி வழங்குவது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகல்போசன விருந்து வழங்கினார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இந்தியாவின் ராஷ்ட்ரபதி பவனில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இதன்போது இலங்கை – இந்திய தலைவர்களை இருநாட்டு இராஜதந்திரிகளும் வணக்கம் செலுத்தியும் கைலாகு கொடுத்தும் வரவேற்றனர்.

உத்தியோகபூர்வ நிழற்படத்திலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தோன்றினர்.