இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இன்றைய தினம் மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு இடம்பெற்றது. அத்துடன் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

விசேடமாக மன்னார் மாவட்டத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் காணி அபகரிப்பு, படையினர் வசம் காணப்படும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், காற்றாலை மற்றும் மணல் அகழ்வினால் மன்னாரில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து முள்ளிக்குளம் மக்களின் காணிகள், அரச கட்டுப்பாட்டில் உள்ளமை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.