ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், வைத்தியர்களிடம் அவரது நிலைமை தொடர்பில் விடயங்களைக் கேட்டறிந்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நாவலப்பிட்டியைச் சேர்ந்த 46 வயதான சாரதியே இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய செய்திகளின்படி

ஹட்டன் – மல்லியப்பூ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து நேற்று(21) விபத்திற்குள்ளானது. விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்.

ஹட்டன், மல்லியப்பு பகுதியில் விபத்திற்குள்ளான பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த CCTV பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்த பின்னர் தரவுக்கட்டமைப்பை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் சாரதி கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தியவாறு பஸ்ஸை செலுத்தியுள்ளமை இதுவரையான விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பஸ் நடத்துநரின் கையடக்கத் தொலைபேசியை சாரதி பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.