புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழுவின் அனுமதியின் பின்னரே குறித்த சந்திப்புக்கான நிலைப்பாடு எட்டப்படும் என தாம் இதன்போது குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறுவது பொருத்தமாக அமையும் என தாம் யோசனை முன்வைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.