சின்னடம்பனைப் பிறப்பிடமாகவும், அனந்தர்புளியங்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் அம்மான் (சிவாஜிகணேசன்) அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. தம்பையா கந்தையா அவர்கள் (15.01.2025) காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் இன்று(15) அதிகாலையில் வீடு வடிவிலான மிதவையொன்று கரையொதுங்கியுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக அதிகளவிலானவர்கள் நாகர்கோவில் கரையோரப் பகுதிக்கு சென்றிருந்தனர். தாய்லாந்து, மியன்மார் அல்லது இந்தியாவில் இருந்து இந்த மிதவை வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட தரப்பினர் குறித்த எண்ணெய் தாங்கிகளை அண்மையில் பார்வையிட்டதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 500 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 24 தாங்கிகளின் முழுமையான உரிமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்தானதாகும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் இன்று(15) இடம்பெற்றுள்ளது. சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று(14) சீனாவை சென்றடைந்தார். இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.