வடமாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றிலில் ஒன்று கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திக்க முற்பட்டனர். இருப்பினும் ஆளுநரின் செயலாளர் ஒருவர் குறித்த போராட்டக்காரர்களைச் சந்தித்து நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் எனவும் கோரிக்கை மகஜர் கையளிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர் தொழில்கோரும் பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும், இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.