அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம், கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இதன்போது உடன்பாடு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றின் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கடன் உதவியை உரிய சந்தர்ப்பத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதன் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உப தலைவர் மார்டின் ரேசர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் துறை முன்னேற்றத்தின் மூலம் கிராமிய வறுமையை ஒழிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த முயற்சிகளுக்கும், பொதுப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை வழங்குமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக வடக்கின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது கூறியுள்ளார்.