நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் செல்வம் அடைக்கலநாதனுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலும், அனுராதபுரத்திலும் இது பற்றிய வழக்குகள் 15 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 16 ஆம் திகதி வழக்கு நடைபெற்றபோது செல்வம் அடைக்கலநாதன் அதற்குச் சமூகமளிக்கவில்லை.

அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை அந்தப் பிடியாணையை நிவர்த்தி செய்வதற்காக செல்வம் அடைக்கலநாதன் தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றம் சென்றிருந்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது 25,000 ரூபாய் சரீரப் பிணையும், கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேவேளை வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்திச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.