கடவுச் சீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்டச் செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் 2,500,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய புதிய சுற்றுலாத் தலங்கள் இனங்காணப்பட்டு அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களை முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் மீது விசேட அக்கறை செலுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.