பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கைமீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. செலவு அறிக்கைக்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மாத்திரமே பதிவாகின. அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கை 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை தமது நாட்டு சட்டத்திட்டங்களுக்கமைய இலங்கையிடம் கையளிக்க முடியாது என சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை இலங்கைக்கு அழைத்த வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றையதினம் இரண்டாவது தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பித்தார்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டார்.
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகச் சின்னங்கள் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப பத்திரம் நாளை முதல் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மாலை 3.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரகலய போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக நட்டஈடு பெற்றுக் கொண்ட மேலும் பலரின் பெயர்களையும் நட்டஈட்டுத் தொகை தொடர்பிலும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்களை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதன்படி, கெஸ்பெவ நகர முதல்வர் லக்ஷ்மன் பெரேரா 696 இலட்சம் ரூபாய் நட்டஈடு பெற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் இருந்ததாக சபை முதல்வர் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் கடற்றொழில் துறைக்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகளால் வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் தமது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன் போது பிரதமர் நிதி தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரதமர் இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில்,