மட்டக்களப்பில் தொழில் கோரும் பட்டதாரிகளால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரச நியமனங்களைக் கோரி அவர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்கோரும் பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களின் நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றாம் வகுப்பு தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. தொடருந்து பொது முகாமையாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த வசதி மீண்டும் செயல்படுத்தப்படுவதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி என்றும்இ அந்தத் திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தார்.