யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரசாங்கத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்ற வலியுறுத்திப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இன்று முதல் அங்குப் பாரிய போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விகாரையை அகற்ற முடியாது எனவும், மாறாக விகாரைக் காணியின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் புத்த சாசன அமைச்சர் கூறியதாகப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக அமைச்சரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, அதனை நிராகரித்த அவர், அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது தம்மிடம் இந்த விடயத்தைப் பற்றிக் கூறியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவொரு பாரதூரமான விடயம் என்பதால், சகல தரப்பினரையும் இணைத்துக் கலந்துரையாட வேண்டும் என தீர்மானித்திருந்த போதிலும் அரசாங்க மட்டத்தில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தையிட்டி விகாரையை தகர்ப்பதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுமுக தீர்வை எட்ட வேண்டுமே தவிர மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்க்கக்கூடிய தீர்வை முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றது. அதில் வழிபாடுகளும் தொடர்கின்றன. அது தொடர்பில் கடந்த காலங்களில் பேசாதவர்கள், நடவடிக்கை எடுக்காதவர்கள் இன்றைக்கு இதனைப் பூதாகரமான பிரச்சினையாக எழுப்புவதற்கு முயல்கின்றனர்.

உண்மையிலேயே இதனை இதயசுத்தியுடன் செய்கின்றார்களா? அல்லது எதிர்வரும் நாட்களில் இவர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இதனைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முயல்கின்றார்களா? என்ற கேள்வி எழுகிறது.

மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முடியாது. இனவாதத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்த முடியாது. இந்த பிரச்சினைக்கு நாங்கள் மக்களோடு கலந்துரையாடித் தீர்வை எட்ட முயல்கிறோம்.

விகாரை சட்டவிரோதமானதா? அல்லது சட்ட ரீதியானதா? என்பதை வாதங்களாக தனித்தனியான கருத்துக்களைச் சொல்ல முடியும். விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களுடையது என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.

அந்த வகையில் நிச்சயமாகப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அதற்குரிய நட்டயீடு மற்றும் காணிகளை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. விகாரையை உடைப்பதன் மூலம் தையிட்டி பிரச்சினைக்குத் தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே.

ஆகவே சுமுக தீர்வை எட்ட வேண்டுமே தவிர மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்க்கக்கூடிய தீர்வை முன்னெடுக்கக் கூடாது எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.