இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவுக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பெங்களூரூவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா 2025 விமான கண்காட்சியின் ஓர் அங்கமாக நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்தல், கடல் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு ஆர்வமுள்ள முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகரித்துவரும் பாதுகாப்பு சவால்களைத் திறம்படச் சமாளித்தல், புலனாய்வு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல், கூட்டுப் பயிற்சிகளை நடத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்திய மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது