தமக்கான வேலைவாய்ப்பினை வழங்கக்கோரி தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த பட்டதாரிகளால் கடந்த சில நாட்களாகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்தும் தமக்கான கோரிக்கைகளுக்கு உரியமுறையில் தீர்வு பெற்றுத்தரப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளன. பதிவு செய்யப்பட்ட 13 கட்சிகளின் செயலாளர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேசி போரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளார். 2012 மற்றும் 2015க்கு இடையில், ரத்மலான சிரிமல் வத்த உயன மற்றும் தெஹிவளை பகுதிகளில் 80 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள காணிகளையும் சொத்துக்களையும் கையகப்படுத்திய விதத்தை வெளியிடத் தவறியதற்காகச் சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் எனத் துருக்கி தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.