யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் விடுவிக்கப்படாத வலிகாமம் வடக்கு காணிகள் தொடர்பாகக் காணி உரிமையாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று மாலை மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாற்றினார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணமலாக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாகப் பிரதமர் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் காணி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் உரையாற்றி விட்டு மேடையிலிருந்து இறங்கி மக்களைச் சந்திக்க வந்தபோதுஇ காணி உரிமையாளரொருவர் பலாலி பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பது தொடர்பாக தமது ஆதங்கத்தைப் பிரதமரிடம் நேரடியாகத் தெரிவித்தார்.
பிரதமர் ஏனையவர்களுடன் பேசச் சென்றபோது காணி உரிமையாளர் உங்கள் அரசியலுக்காக எங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரைச் சூழ்ந்திருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த காணி உரிமையாளரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தபோது அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.