புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சட்டத்தரணியின் சீருடையில் பிரவேசித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தித் தப்பிச்சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் துப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைத்துப்பாக்கி நீதிமன்ற வளாகத்திலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் நீதிமன்ற வளாகத்திற்குள் தற்போது சிறப்பு சோதனை நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.