அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்கள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று…

நாற்பத்திரெண்டு வருட காலத்திற்கும் அதிகமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த முதன்மையான போராளியாக அவர் திகழ்ந்தார். ‘புதியபாதை’ சொன்ன தோழர் சுந்தரம் அவர்களின் பாசறையில் இணைந்து, செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் வழிப்படுத்தலில் சமூகப் புரட்சிக்கான போராளியாக தன்னை வார்த்தெடுத்துக் கொண்டார்.
தனது ஆரம்ப பயிற்சிக் காலம் முதல் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, ஒவ்வொரு காலகட்டத்தின் மாற்றத்திலும் தன்னை முதன்மைப் பங்காளியாக்கிக் கொண்டார்.
செயலதிபரின் காலங்களில் அவரது நம்பிக்கைக்குரிய தூதுவராக செயற்பட்டது போலவே, தனது இறுதிக் கணம் வரையிலும் கட்சித் தலைவருக்கு நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டு தலைவரினதும், கட்சியினதும் வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் ஆதாரமாய் திகழ்ந்தார்.
நல்லறிவு தரும் புத்தகங்களையும், வாசிப்புப் பழக்கத்தையும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கிக் கொண்ட அவர், தனக்கு கிடைத்த வளங்கள் அனைத்தையும் கொண்டு, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களையும் அறிவூட்டுவதிலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தேவைக்கு உதவுவதிலும் என்றுமே பேரவாக் கொண்டிருந்தார்.
அன்னாரின் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் என்றென்றும் நினைவில் கொள்வோம்.