ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பங்குகொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்றுமுற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.
உள்ளூராட்சி தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லையென்றும் குறிப்பிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை இன்று (23) தரிசித்த பின்பே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இன்றையதினம் ஜெனிவா பயணமாகவுள்ளது. இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசேட அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் அஸ்கிரிய, கம்பஹா மற்றும் உடுகம்பொல ஆகிய பகுதிகளில் கைதாகியுள்ளனர். 19, 22, 25 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது. பிரதானமாக சித்திரவதை, தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல், துன்புறுத்தல் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்காமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தின் கீழ் இலங்கையும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி சர்வதேச அரசாங்கங்களுக்கு இடையே நடைபெற்ற கடல் பல்லுயிர் பெருக்கம் குறித்த விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.