பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கைமீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. செலவு அறிக்கைக்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மாத்திரமே பதிவாகின. அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கை 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை தமது நாட்டு சட்டத்திட்டங்களுக்கமைய இலங்கையிடம் கையளிக்க முடியாது என சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை இலங்கைக்கு அழைத்த வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றையதினம் இரண்டாவது தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பித்தார்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டார்.