சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுதினம்….தோழர் மூர்த்தி யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்டவர்.
இவர் புளொட் அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும்,’புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான அமரர் தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் மூத்த சகோதரியின் புதல்வராவார்.
ஆயுதப் போராட்டம் வீறு கொண்டெழுந்த 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தி, தன்னைக் கழகத்தோடு இணைத்துக்கொண்டு 1989ஆம் ஆண்டுவரை தீவிர செயற்பாட்டாளராக தளத்தில் இயங்கினார்.
எளிமையும், நேர்மையும், துணிவும் மிக்க ஒரு ஆயுதப் போராளியாக மட்டுமன்றி அன்றைய அரசியல் நிலைமைகளை சரிவரப் புரிந்து, அது தொடர்பான கருத்துக்களை கழகத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய பாதையில் அவ்வவ்போது எழுதிவந்த ஓர் எழுத்துப் போராளியுமாவார்.
தோழர் மூர்த்தி 1989இல் தளத்திலிருந்து புலம்பெயர்ந்த பொதிலும் தளத்தில் இயங்கிய தோழர்களுடன் அவ்வப்போது தொடர்பில் இருந்தார்.
பின்பு இலங்கை சென்றிருந்தபோது, போர் நடந்த பகுதிகளை நேரில் சென்று பார்த்து மனம் வெதும்பிய அவர், போரினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்திருந்தார்.