உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக புதிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பை விரைவில் வழங்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதிவாதிகளிடம் விளக்கங்களை கோராமல் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டே புதிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு –
இந்த வழக்கு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் கடமைகளை தவறவிட்டதன் ஊடாக குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழான குற்றங்களை இழைத்துள்ளமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும்.
இந்த வழக்கை விசாரணை செய்த கொழும்பு விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழக்கின் பிரதிவாதிகளை விசாரணைகளுக்கு அழைக்காது 2022 பெப்ரவரி 18ஆம் திகதி பிரதிவாதிகளை விடுவித்து தீர்ப்பளித்தது.
நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மொஹமட் இசர்டீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த தீர்ப்பை வழங்கியது.
மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தின் இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை வலுவிழக்கச் செய்யுமாறும் கோரி சட்ட மாஅதிபரால் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மேன்முறையீட்டை பரிசீலித்த உயர் நீதிமன்றம் பிரதிவாதிகளை அழைக்காமல் அவர்களை விடுவித்தமையானது சட்டத்திற்கு முரணான விடயம் என உத்தரவிட்டது.
வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றின் நீதிபதிகள் குழாத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுவிக்குமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு உயர் நீதிமன்றத்தினால் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது.