கேள்வி :1) எத்தகைய இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் புதுக் கட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன?
2) உள்ளூராட்சி மன்ற வாரியாக ஆசனப் பங்கீட்டுத் தீர்மானங்கள் எத்தகைய அடிப்படையில் எடுக்கப்படும்?
3) தேர்தலின் பின்பு மன்றங்களில் வேறு கட்சிகளோடுஇணைந்து ஆட்சியமைக்கும் சாத்தியப்பாடுகள் உள்ளனவா?
4) மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இதே கூட்டணியாகவே போட்டியிடுமா?
5) தற்போது ஏழு கட்சிக் கூட்டணியாக உள்ள கட்சியில் தீர்மானங்கள் எடுக்கும் பொறிமுறை எவ்வாறாக வகுக்கப்பட்டுள்ளது?
பதில் :
தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுகின்ற, தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு என்றுமே அடிப்படையாக அமையக்கூடிய தமிழ்த் தேசியத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தாத தமிழ்க் கட்சிகள் என அடையாளப்படுத்தக்கூடிய கட்சிகள் மற்றும் அமைப்புகளுடனேயே, உள்ளூராட்சித் தேர்தலை ஒன்றாக இணைந்து முகம் கொடுக்கும் நோக்கில் கூட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைவாகவே இக் கூட்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்கின்ற ஒரே கட்சியாகவே நாம் கையாளுகிறோம். அதே நேரத்தில் 2023ஆம் ஆண்டுத் தேர்தலில் உள்ளூராட்சி மன்ற வட்டாரங்களுக்கு பெயரிடப்பட்டு அத் தேர்தல் கைவிடப்பட்ட நிலையிலும் இன்று வரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகளுடன் இணைந்து பயணிக்கின்ற வேட்பாளர்களுக்கு வேட்பாளர் தெரிவில் முன்னுரிமை வழங்குகின்றோம். ஏனைய இடங்களுக்கு, அது வட்டாரப் பட்டியலாகட்டும் அல்லது மேலதிகப் பட்டியலாகட்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாவட்ட வேட்பாளர் தேர்வுக்குழு பொருத்தமானவர்களை பெயரிட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எமது தாயகப் பிரதேசத்தில் உள்ள உள்ளூர் அதிகாரசபைகளின் அதிகாரத்தை பாரப்படுத்துவதன் மூலம் எமது பிரதேசங்களின் வளங்களினதும் அங்கு வாழும் மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பை தென்னிலங்கைத் தேசியக் கட்சிகளிடம் கையளிக்க முடியாது. உள்ளூராட்சி மன்றங்கள் என்பது அரசியல் தீர்மானங்களுக்குரிய இடமல்ல. உள்ளூர் விடயங்களை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக, சந்தர்ப்பம் ஏற்படுமாயின், ஏனைய தமிழ் அமைப்புகளுடன் பேசுவோம்.
இக் கூட்டு உருவான வேளையில், பங்குகொண்ட அனைத்து அமைப்புகளும் இக்கூட்டு ஒரு தேர்தல் கூட்டாக அல்லாது அரசியல் கூட்டாக தொடர்ந்து செயற்பட வேண்டும் என்கின்ற தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த நிலைப்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமும் காலத்தின் தேவையுமாகும்.
இக் கூட்டை ஏழு கட்சிக் கூட்டு என்று சொல்வதைவிட, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் சக கட்சிகளும் இணைந்த ஒரு கூட்டு என அடையாளப்படுத்துவதே பொருத்தமானதாகும். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இக் கூட்டில் இணைந்துள்ள கட்சிகள் ஒவ்வொன்றினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இணைப்புக்குழுவே அனைத்து முன்னெடுப்புகளையும் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகளுடன் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கின்றன. ஏனைய ஆறு மாவட்டங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாவட்டக்குழு அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுக்குழுவின் ஆலோசனையுடன் மேற்கொள்கின்றது.