சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி சம்பூர் நிலத்தடி சூரிய மின் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தருவார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது விடுத்த அழைப்பின் பேரிலேயே பாரதப் பிரதமர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அபிவிருத்தியின் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கும் ஒரு வளமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் அபிலாஷை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

மக்களின் பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார பாதுகாப்புக்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

பொருளாதார வலுவூட்டல் தேவைப்படுபவர்களுக்குக் கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் இதற்காக சமுர்த்தி நிதியத்திலிருந்து 55 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.