அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார், தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்தன.  கபொத சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் 26 ஆம் திகதி நிறைவு பெற உள்ளன. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும்.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக, தேசிய அடையாள அட்டை விபரங்களை உறுதிப்படுத்தும் கடிதங்களைப் பெறாத பரீட்சார்த்திகளுக்கு குறித்த கடிதத்தை வழங்குவதற்காக மாத்திரம் ஆட்பதிவு திணைக்களம் நாளை திறந்திருக்கும்.
பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள மாகாண அலுவலகங்கள் காலை 8.30 முதல் பிற்பகல் 12.30 வரை திறந்திருக்கும்.
குறித்த கடிதத்தை drp.gov.lk எனும் ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து தரவிறக்கும் செய்து கொள்ள முடியும்.
இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்காத பரீட்சார்த்திகள் அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினால் உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை கொண்டுவர வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.