இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கோண்டு அடுத்த மாத முற்பகுதியில் இங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் இன்று(15) தெரிவித்தார். வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் செலவீன தலைப்புகள் மீதான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
சர்வதேச நாடுகளுடன் பிளவுகளின்றி தொடர்புகளைக் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிக் கொள்கைகளை எதிர்கொள்வதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிக்க செயலணியொன்று அமைக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த கலந்துரையாடலை சாதகமான முறையில் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.