வெலிகம பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தவிர்ந்த ஏனைய 6 சந்தேகநபர்களையும் கைது செய்ய வேண்டாம் என சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய முதற்கட்ட விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தவிர்ந்த ஏனைய 6 சந்தேகநபர்களின் நீதிப்பேராணை மனு இந்த மாதம் 21 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெலிகம – பெலென பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்வதற்கு அண்மையில் மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான முடிவு நாளை வெளியிடப்படும் என முன்னதாக மாத்தளை நீதவான் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனிடையே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வாக்குமூலம் ஹோகந்தரவில் உள்ள அவரது வீட்டில் வைத்துப் பெறப்பட்டதாகவும், காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காகக் குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்போது பல இடங்களில் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.