உயர்நீதிமன்றத்தினால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி  மாத்தறை வெலிகம ஹோட்டலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு  பெப்ரவரி 08 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தேஷபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜராகுவதை புறக்கணித்தமையினால் அவரை கைது செய்வதற்காக பொலிஸாரினால் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் தேஷபந்து தென்னகோன் தாம் கைது செய்யப்படுவதை தடுத்து  உத்தரவிட கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததுடன் அந்த மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

18.03.2025……..

பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளங்காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக சில குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்கான ஒன்றிணைந்த சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பதற்கு உதவுபவர்களும் கைது செய்யப்படவுள்ளனர்.