முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தது.
சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்துக்கும் இடையில் இந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வாரம் எட்டப்பட்டிருந்தது.
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு தங்களுடைய அமைப்பே’ எனவும் ‘அந்த பெயரைப் பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்படவில்லை’ எனவும் அந்த கூட்டமைப்பின் தலைவர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் குற்றஞ்சுமத்தியுள்ளமை தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது.
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன், தமிழர்களின் நலனுக்காகப் பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர் எனவும் இந்த விடயம் குறித்து தம்மிடம் அவர் கலந்துரையாடவில்லை எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இதற்குப் பதிலளித்தார்.
எவ்வாறாயினும், தங்களது எண்ணத்துடன் ஒருமித்து செயற்படக்கூடிய எவரும் தங்களது கூட்டணியில் இணையமுடியும் என அவர் தெரிவித்தார்.
தம்பியப்பா கோபாலகிருஷ்ணனும் தங்களுடன் இணைய முடியும் எனவும் அவ்வாறு இணையும் பட்சத்தில் அவருக்கு அதிகாரமிக்க பதவிகளை வழங்க முடியும் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் குறித்த கூட்டமைப்பின் பெயரை மாற்றாவிட்டால்
அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கிழக்கு தமிழ் கூட்டமைப்பின் தலைவர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.