மாத்தறை ரூனெயளர் தேவேந்திரமுனை பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூவரில் குறித்த கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகக் கூறப்படும் நபரின் மனைவியும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் கந்தர மற்றும் தேவேந்திரமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு முன்னதாக தெஹிகெதர ரங்க என்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யோமேஸ் நதிஷான் என்ற நபருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் குறித்த இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தெஹிகெதர ரங்க என்ற சந்தேக நபர் கொலைக்கான திட்டத்தை வகுத்திருக்கலாம் எனவும் காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்த யோமேஷ் நதிஷ் என்ற நபர் இதற்கு முன்னதாக ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் இந்தியக் கடற்பரப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்தியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகின் பொறுப்பாளராக, குறித்த நபரின் உறவினர் ஒருவரே செயற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றைய நபரான பசிந்து தாருக என்பவர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் ஏதேனும் பதிவாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.