ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைபேசி செயற்பாட்டாளராக பணியாற்றுகையில் T -56 தோட்டாவை வைத்திருந்ததாகக் கூறும் இராணுவ அதிகாரியை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயணப் பொதியொன்றில் தோட்டாவை மறைத்து வைத்து ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயற்சித்த இராணுவ சிப்பாய் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றும் வீரர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்ற நியமிக்கப்பட்ட இராணுவ வீரர் என்பதுடன் கடந்த 20 ஆம் திகதி விடுமுறை பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த சந்தேக நபரான இராணுவ சிப்பாய் லுனுகம்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றிற்குச் சென்று மீண்டும் பணிக்காகத் திரும்பிவந்துள்ளார்.
இதன் போது ஜனாதிபதி செயலகத்திற்கு உள்நுழையும் பொது மக்கள் நுழைவிற்கு அருகில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் சிப்பாயின் பயணப்பொதியை ஸ்கேன் இயந்திரத்தைக் கொண்டு பரிசீலித்துப் பார்த்த போது இந்த தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கோட்டை காவல்துறையினர் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இன்று அறிவித்துள்ளனர். எதிர்வரும் 28 ஆம் திகதி சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் ஜனாதிபதி செயலகத்திற்கு நுழைய முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஸ்கேன் இயந்திரம் ஊடாக இதைப் பற்றி அறிந்த பின்னர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கோட்டை காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.