மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள நால்வருக்கு எதிராக தடைவிதித்துள்ளதன் ஊடாக பிரித்தானியா இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்தியுள்ளதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜயசூரிய, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராகப் பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை அரச தரப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற போரில் இரு தரப்பினரும் பரவலான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களைச் செய்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்களை மூடிமறைப்பதற்கும் அவற்றுக்குப் பொறுப்பானவர்களைப் பாதுகாக்கவும் முயன்றதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பாக ஆதாரங்களைச் சேகரித்துப் பொறுப்புக் கூறலைக் கோருவதற்கான தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்மொழிந்த இணைத் தலைமை நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும்.
எனவே, இலங்கை பொறுப்புக்கூறலை அடைவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்இ நீதியைப் பெறுவதற்கான சர்வதேச நடவடிக்கைகள் அவசியமாகும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்க வேண்டும்.
அத்துடன் இலங்கையின் போர்க் குற்ற சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.