கொழும்பில் ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் தொடர்பாக 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தெளிவுபடுத்தி காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞர், ஏதோவொரு வகையில் பயங்கரவாதச் செயலொன்றை செய்வதற்குத் தயாரானவர் என்ற நியாயமான சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீன் தொடர்பில் கருத்து வெளியிடுபவர்கள் கைதுசெய்யும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் குப்பைக் கூடையொன்றில் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர் ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதாகக் கூறிய அரசாங்கம் இதுவரையில் 5 பேரைக் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 22 ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை ஊடகப்பிரிவு குறித்த தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த இளைஞர் வெறுமனே ஸ்டிக்கர் ஒட்டும் செயலைத் தாண்டி ஒரு கடும்போக்குடைய நபராக இருப்பதும் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்இ இணையம் மற்றும் வேறு முறைகளைப் பயன்படுத்துவதால் சந்தேக நபர் சில உளவியல் தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளார் எனவும், அந்த மனநிலையின் அடிப்படையில் மத தீவிரவாதச் செயலைச் செய்வதற்கான அவரது ஆர்வம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபருக்குச் சொந்தமான கணினி வன்பொருள்இ தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கைபேசிகள் குறித்து தடயவியல் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.