சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டதை போல ஊழலிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஊழல் ஒழிப்பு செயற்பாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் ஊழலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவுக்குப் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் விசாரணைக்கு ஏற்ப சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்கிறது. நீதிமன்றமே வழக்கு விசாரணைகளை மேற்கொண்டு, ஊழல்வாதிகளுக்கு எதிரான தண்டனையை விதிக்கிறது.
இந்த விடயத்தில் நீதித்துறைக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் தலையீடுகள் எதுவும் இருக்காது என்பதை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, மூன்று முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் இன்றுவரை தலைமறைவாகியுள்ளார்.
அதேநேரம், சர்ச்சைக்குரிய ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சில விடயங்கள் வெளிப்படுத்தப்படும்.
திட்டமிட்ட குற்றக் குழுக்களுடன் சில காவல்துறை அதிகாரிகளும் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் திருந்துவதற்காகக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஊழலில் ஈடுபட்ட பல அரசியல்வாதிகள் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆள வாய்ப்பு வழங்கப்படாது எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.