கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்மொழிந்து மு.க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை, முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக அமைந்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசாங்கங்கள் மாறினாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.

தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு மறந்துவிடும் காரணத்தால் தமிழக மீனவர்களைத் தாம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என அழுத்தமாகக் கூறுவதாகச் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல்,  மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக இலங்கைக் கடற்படையினரும்,  இலங்கை அரசும் நடந்து கொள்வது தமக்கு வருத்தமளிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

இதனைப் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்பில் தாம் இதுவரை 74 கடிதங்களை இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியுள்ளதாக மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு மீட்பே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்திட விரும்புவதாக மு.க ஸ்டாலின் கூறினார்.

கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது.

ஆனால், அரசியல் ஆதாயத்திற்காகக் கட்சிகள் செய்யும் அதே தவறை மத்திய அரசு செய்வது வருந்தத்தக்கது எனவும் ஏற்கமுடியாதது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தில் கச்சத்தீவை மீட்பதற்கான ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும் என மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.