யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 மாணவர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரிடமிருந்தும், மாணவரிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் யாழ்ப்பாணம் பல்கலைகழக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகிடிவதை சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்து அது தொடர்பிலான அறிக்கையினை எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு முன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்துக்கு அனுப்பிவைக்குமாறு உரிய தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் அடங்கிய கடிதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.