ஜம்மு – காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடி கண்டனம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்துத் தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
உலகில் பயங்கரவாதம் எங்கு இடம்பெற்றாலும், அதனை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்தார்.
மேலும், இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.