புனித தந்ததாது கண்காட்சியை முன்னிட்டு, ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளன. அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மறுதினம் மீளத் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இதுவரையான காலப்பகுதியில் குறித்த கண்காட்சியினைப் பார்வையிடுவதற்குப் பிரவேசிப்பவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் மற்றும் காவல்துறையினர் தொடர்ச்சியாக ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
அத்துடன், கண்டி நகரினை தூய்மைப்படுத்தும் விசேட திட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்ஹ தெரிவித்தார்.
அதற்கமைய, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பங்கேற்புடன் கண்டி நகரைத் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மத்திய மாகாண சபை, கண்டி மாநகர சபை, மாவட்ட செயலகம் மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்கேற்புடன் குறித்த தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது குறித்த காலப்பகுதியில் கண்டி நகரைத் தூய்மைப்படுத்தும் செயற்பாட்டிற்குப் பங்களிப்பு செய்த கண்டி மாநகரசபை பணியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.