கேள்வி :
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உங்கள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டியிடாத ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள உங்கள் ஆதரவாளர்களின் வாக்குகளை யாருக்கு பெற்றுக் கொடுப்பீர்கள்? இதற்கென ஏதேனும் கட்சிகளுடன் உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்களா?
பதில்:
உத்தியோகபூர்வமாக அவ்வாறான உடன்பாடுகள் எதுவும் ஏனைய கட்சிகளுடன் இதுவரையிலும் இல்லை.

அதேநேரத்தில், எங்கள் கூட்டணி போட்டியிடாத சபைகளின் வட்டாரங்கள் பலவற்றிலும் அங்கு போட்டியிடுகின்ற பல்வேறு கட்சிகளினதும் வேட்பாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் எமது கூட்டணியின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களிடம் ஆதரவினைக் கோரியுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
தென்னிலங்கைக் கட்சிகள் சார்பாக வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் எம்மினத்தைச் சேர்ந்தவர்களாயினும்கூட, அவர்கள் சார்ந்த கட்சிகள் யாவும் பௌத்த சிங்கள மேலாதிக்கச் சிந்தனையை ஏற்றுக்கொள்கின்ற அல்லது அவ்வாறான சிந்தனையின் செல்வாக்கிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாதிருக்கின்றவையாகவே செயல்படுகின்றன. அவ்வாறான கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதும் அவ்வாறான கட்சிகள் ஏதேனும் ஒரு சபையில் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்காமலிருப்பதும் எமது கூட்டணியின் நிலைப்பாடாக உள்ளது.
இவ்வாறான நிலையில், நாம் போட்டியிடாத சபைகளில், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற ஏனைய அரசியல் கட்சிகளின் வட்டார வேட்பாளர்கள் மத்தியில், மக்களின் உரிமைகள் நலன்கள் சம்பந்தமான செயற்பாடுகளில் நேரடியாக பங்குகொண்டு தீர்வுகளைத் தேடித்தரக்கூடிய துடிப்பான வேட்பாளர்களை ஆதரிப்பதே பொருத்தமான தெரிவாக அமையும் என்பதே எனது கருத்தாகும்.