ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளை வழங்குவதற்கான துண்டு சீட்டுகள் குறித்த நாட்களில் நண்பகல் 12 மணிவரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்றத்தால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்படும் தண்டப்பணத் தொகையை இணையவழி மூலம் செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி இந்த கொடுப்பனவுகளை GovPay செயலி மூலம் செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
தேஷபந்து தென்னக்கோனை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேஷபந்து தென்னக்கோனை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் இலங்கையில் தொழிலில் ஈடுபட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவ்வாறான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளை கைது செய்வதற்கான முயற்சியின் போது, அவர்களுக்கு சொத்துகளை வாடகைக்கு வழங்கியிருந்த உள்ளூர் பிரஜைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (09) இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் இந்த வீதியில் பயணிக்கும் அனைவரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்றோர் கிழக்கு மாகாணத்துக்காக எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், கடந்த காலங்களில் பல தமிழ் புத்திஜீவிகள் காணாமல் போன சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகக் கருதி பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், தற்போதைய அரசாங்கம் இரண்டு முன்னுரிமை விடயங்களைக் கருத்திற் கொண்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்தார். அரசாங்கம், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதிலும், தாமதமான தேர்தல்களை நடத்துவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியதாகப் பிரதமர் கூறினார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.